சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை இழுத்து மூடாவிட்டால் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.\r\n\r\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\r\n\r\n” பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சார்ந்த மாணவ-மாணவிகள் போராடியபோது, அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தை கைவிடும்படி எச்சரித்திருக்கிறார்கள்.\r\n\r\nமாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுக்கவே, மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியது சகித்துக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமை. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மாணவி ஒருவரும் மயக்கம் அடைந்திருக்கிறார்.\r\n\r\nமதுவிலக்கு கோரி போராடி கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது எந்தவித வழக்குகளும் இல்லாது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் விருப்பத்தை உணர்ந்து அரசு உடனே மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்.\r\n\r\nஅதற்குமுன் முதற்படியாக தமிழகம் முழுக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மதுபானக்கடைகளை அரசு உடனே இழுத்து மூட வேண்டும். இதனை அரசு செய்யத்தவறும் பட்சத்தில் மாணவர்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.